நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 30 மருத்துவர்கள் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் அரசு அனுமதியின் பேரில், தற்காலிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானது.
இதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் நேர்காணல் நடந்தது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 மருத்துவர்கள், 22 செவிலியர்கள், 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment