சுற்றுலா மையங்களை மேம்படுத்த நடவடிக்கை: நாமக்கல்லில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

''தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து, அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.


நாமக்கல் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில், நன்கொடையாளர்கள் மூலம், 23 மல்டி பாரா மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கருவிகளை வழங்கினார். திருநங்கை காயத்ரிஸ்ரீக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக தற்காலிகமாக பணியாற்ற உத்தரவிட்டு, அதற்கான பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் கூறியதாவது.

தமிழகத்தில் 18 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. எக்கோ டூரிசம், மெடிக்கல் டூரீசம், பீச் டூரிசம் உள்ளிட்ட வகைகளில், சுற்றுலாவை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள, 1,000 சுற்றுலா தலங்களில், 295 சுற்றுலா மையங்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, லேசர் ஒளி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பூம்புகாரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 சமூக வலைத்தளங்கள் மூலம், சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என, ஆலோசித்து வருகிறோம். கொல்லிமலையை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து, அடுத்த முறை ஆலோசிக்க உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில், 2,880 படுக்கைகள் உள்ளன. 

அதில், 1,490க்கு மேல் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.

Comments