நாமக்கல் கோழிப் பண்ணைகளில் 28 கொத்தடிமைகள் மீட்பு
நாமக்கல் அருகே கோழிப்பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான கோழிப்பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பெரிய பண்ணைகளில் வடமாநிலத்தவர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல்லை அடுத்த அணியாபுரம், எஸ்.வாழவந்தி, லத்துவாடி ஆகிய இடங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில்15 முதல் 25 வயதுடைய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 25 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் வேலை பார்த்து வந்தனர்.
அவர்களுக்கு பல மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் எம்.கோட்டைக் குமாருக்கு அவர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து திங்கள் கிழமையன்று கோட்டாட்சியர் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பினர் சம்மந்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு சென்று அங்கிருந்த 28 பேரையும் மீட்டு நாமக்கல் அழைத்து வந்தனர்.
நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உணவுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த 28 பேரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மூன்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
Comments
Post a Comment