தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruting Agency) பற்றிய முழு விபரம்
தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruting Agency) – தமிழக இளைஞர்களுக்கு சரியான தருணம்.
பொதுவாகவே அரசுப் பணி நாடும் தமிழக இளைஞர்கள் 95% பேர் குதித்தால் தலை கீழாக தான் குதிப்பேன் என்பது போல TNPSC நடத்தும் அல்லது தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை. இதன் காரணமாகவே மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களின் சரி விகித பிரதிநிதித்துவம் எந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் பிரதிபலிப்பதில்லை.
காரணம் வட இந்திய மாநில இளைஞர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார்கள்.. அது கடை கோடி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் ஆகட்டும் அல்லது லடாக் பள்ளத்தாக்கில் 14,500 அடி உயரத்தில் உள்ள SBI வங்கி ஆகட்டும்... வட இந்திய இளைஞர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக இளைஞர்களின் கனவும் கடவுளும் TNPSC தான். தமிழகத்தை தாண்டி நம்ம பசங்களோட அந்த வீர தீரம் லாம் பொட்டி பாம்பாக அடங்கி விடும்.
இதற்கு காரணங்கள் மூன்று
1. மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பது.
2. மத்திய அரசு தேர்வுகள் நமக்கு எதுக்கு என்ற மன நிலையில் இருப்பது.
3. மத்திய அரசு பணிகள் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாதது
இதனால் வருடம் தோறும் நடைபெறும் மத்திய அரசின் 1.25 லட்ச பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பட்டியல் பெரும்பாலான தேர்வுகளில் ஒரு பெயர் கூட இருக்காது. முக்கியமான முதல் காரணம் ஒன்று தேர்வு எழுதி இருக்க மாட்டார்கள் அல்லது ஆங்கிலம் தெரியாமல் தேர்வில் வென்று இருக்க மாட்டார்கள். (தமிழக இளைஞர்களின் கனவை யாரும் தட்டி பறிப்பதில்லை). இதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது கெஞ்ச வைக்கிறது என அரசியல் செய்யும் முகநூல் போராளிகளை நம்பி இன்னும் கூட பல இளைஞர்கள் வாய்ப்புகளை சில்லறையாக சிதறி விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசின் பல தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் கால விரயம் ஏற்படுவதால் ஒவ்வொரு தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்தும் சுமை இருப்பதால் அதை ஒன்றாக்கி தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (NRA) ஒன்று ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டது போல தற்போது காபினெட் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வருடம் இது நடைமுறைக்கும் வருகிறது.
தமிழக இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
1. மத்திய அரசின் பட்டதாரி தர ரயில்வே பணிகள், Income Tax Inspector, சுங்க அதிகாரி , CBI Inspector பணிகள், NIA வின் Inspector,தபால் துறை Inspector,அமலாக்க துறை அதிகாரி, வங்கி அதிகாரி போன்ற பல அதி முக்கிய பணிகள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படும்
2. மத்திய அரசின் +2 தர பணிகளான Upper Division Clerk,Postal Assistant,Data Entry Operator போன்ற பணிகளும் 10ம் வகுப்பு தர பணிகளான Lower Division Clerk,Stenographer போன்ற பணிகள் இந்த தேர்வின் நிரப்பப்படும்
3. இந்த தேர்வு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் On Line தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறும்
4. இந்த தேர்வு எழுத Attempt வரையறை எல்லை கிடையாது.. வருடம் இரு முறை இந்த தேர்வு நடக்கும். ஆனால் வயது வரம்பு உண்டு
5. முக்கியமாக இந்த தேர்வு தமிழிலும் நடைபெறும். அது போக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்த தேர்வு நடைபெறும்.
6. ஒரே பாடத்திட்டம் என்பதால் கண்டிப்பாக Aptitude,Reasoning,General Awareness,English இருக்கும். எனவே ஆங்கிலம் தெரியாமல் இங்கே நம் கொடியை இங்கே நாட்டுவது முடியாது. English தவிர்த்து மற்ற பிரிவுகளின் கேள்விகள் தமிழில் இருக்கும்.
7. இந்த தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் பொறுத்து மத்திய அரசு நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தி கொள்ளும். கிட்டத்தட்ட CAT Score போன்று.. அதில் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டு எப்படி IIM மற்றும் தனியார் கல்லூரிகள் சேர்க்கை நடத்துகிறதோ இங்கே நீங்கள் பணியில் அமர்தப்படுவீர்கள்.. IBPS இந்த முறையை தான் தற்போது பின்பற்றுகிறது.
8. பிராந்திய Cut Off அல்லது மாநிலத்திற்கு என்று உள் ஒதுக்கீடு தனியாக இருக்க வாய்பில்லை.. எனவே அகில இந்திய அளவில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் கொண்டே எல்லா மாநிலத்தில் உள்ள மத்திய அரசு பணிகளுக்கு நீங்கள் போட்டி போட முடியும். (There may be some exemptions)
9. நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மூன்று வருடங்களுக்கு செல்லும். எனவே தனியார் நிறுவனங்கள் கூட இந்த மதிப்பெண்களை கொண்டு எதிர்காலத்தில் பணி அமர்த்தலாம். மாநில அரசு பொறுத்தவரைசெலவை குறைக்க வேண்டும் என்று TNPSC தனியாக தேர்வு நடத்தாமல் NRA மதிப்பெண் கொண்டே பணி அமர்த்த முடிவெடுத்தாலும் ஆச்சர்யபடவேண்டாம். ஏனெனில் அதில் உள்ள மதிப்பெண்கள் கொண்டு இங்கே உள்ள JA,VAO,Assistant போன்ற பணிகளை மாநில அரசின் Reservation முறையை பின்பற்றி நிரப்பலாம்...நிரப்பாமலும் இருக்கலாம்.
10. NRA வின் CET தான் இனி இந்தியாவின் மிகப்பெரும் தேர்வாக இருக்க போகிறது. விரைவான தேர்வு முடிவுகள் இதன் மூலம் சாத்தியம் ஆகிறது. நேர விரயம் மிச்சம்.
மத்திய அரசு மாநில தேர்வாணைய உரிமையில் கை வைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்வு என்பது மத்திய அரசு பணிகளுக்கு தான். மாநில அரசு பணிகளுக்கு இல்லை. அப்படி ஒரே தேர்வு பின்பற்றினால் அரசியல் அமைப்பு சட்டத்தினால் 315 பிரிவால் ஏற்படுத்தப்பட்ட மாநில தேர்வாணையம் எதற்கு என்ற கேள்வி வரும். அதை கலைக்கவும் முடியாது.
எனவே எதற்கு எடுத்தாலும் அரசை குறை கூறாமல் சமூக வலைதளங்களின் முகமூடிகளின் சதியில் விழாமல் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் பல வருட கனவு... அதை நிறைவேற்ற சரியான களமும் சரியான தருணமும் அமைந்து இருக்கிறது... அது தான் National Recruiting Agency
இனி உங்கள் கையில்.
Comments
Post a Comment