அனுமதி பெறாமல் 144 தடை உத்தரவை மீறி, நாமக்கல் நகரில் சாலையோரம் அரிசி வியாபாரம் செய்த வெளி மாவட்டத்ததை சேர்ந்தவருக்கு நாமக்கல் நகராட்சி அபராதம்
நேற்று 26/05/2020 மாலை 5 மணியளவில் நாமக்கல், திருச்சி சாலையில், ஹோட்டல் ஶ்ரீ பவன் எதிரில், வெளி மாவட்டத்தை சேர்ந்த சிலர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிவந்து விற்பனை செய்கிறார்கள் என தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன், SK செந்தில்குமார் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்த்த போது சுமார் 50 பொதுமக்கள் கூட்டமாக சூழ்ந்திருக்க, மாஸ்க் கையுறை என எதுவேமே அணியாமல் சமூக இடைவெளியை துளியும் பின்பற்றாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது முறையாக எந்த ஒரு ஆவணங்களும், அனுமதியும் பெறாமல் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்பதை துளியும் மதிக்காமல் கூட்டத்தை கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தினால் உடனடியாக நகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் உடனடியாக நகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விதிமீறல் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அரிசி ஏற்றிவந்த வாகனம் நகராட்சி ஆணையரால் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கடிதம் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட அரிசி வியாபாரி மற்றும் லாரி ஓட்டுனரிடம் நாமக்கல் நகராட்சி ஆணையர் திரு.ஜஹாங்கிர் பாஷா அவர்கள் விசாரணை நடத்தினார்.
அரிசி வியாபாரி தனது தவறை ஒப்புக்கொண்டு எழுத்துபூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்ததை தொடர்ந்து, நகராட்சியின் அனுமதி பெறாமல் சாலையில் பொதுமக்களுக்கு இடையூராக வியாபாரம் செய்தது, மாஸ்க் அணியாமல் விதிமுறைகள் மீறியது, 144 தடை உத்தரவை மதிக்காமல் கூட்டம் சேர்க்க காரணமாக இருந்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகை செலுத்திய பிறகு அரிசி விற்பனையாளர் மற்றும் லாரி ஓட்டுனரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்ட வணிகர் சங்கத்தின் புகாரினை ஏற்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில் மிக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த நாமக்கல் நகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் ஆய்வாளர் அவர்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments
Post a Comment