நாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு தகரம் கொண்டு அடைத்து கண்காணிப்பு
நாமக்கல் நகரில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிகள் அனைத்தும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 1,800 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்தல், வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்குதல், காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே தெருவில் 3-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வந்தனர். தற்போது சுகாதாரத்துறை ஒரே தெருவில் 10-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டால், தகரம் கொண்டு அடைத்து, கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையிலான குழுவினர்
துறையூர் சாலை முதலாவது குறுக்கு தெரு
கணேசபுரம் புதுத்தெரு
S.P.புதூர் பெரியப்பட்டி ரோடு
பத்ரகாளியம்மன் தெரு
குழந்தான் தெரு
சின்னமுதலைப்பட்டி
E.Bகாலனி
என 7 தெருக்களை தகரம் கொண்டு அடைத்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
7 தெருக்களிலும் தலா 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்க அந்த தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து உள்ளோம்.
அப்பகுதியில் வெளி நபர்கள் செல்லவும், அங்கு உள்ளவர்கள் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வாங்கி கொடுக்கப்படும். 24 மணி நேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment