நாமக்கல் நகராட்சி மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

நாமக்கல் நகராட்சி மண்டபத்தை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அதை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன் எதிரொலியாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே நாமக்கல் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் வரை மாவட்டத்தில் 20,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. அதை தவிர்க்கும் விதத்தில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடந்தது.

அதையொட்டி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பழுதாகி உள்ள மின் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் சரி செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இதனிடையே அந்த கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு டாக்டர்களுக்கான அறை மற்றும் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் தமிழ்மணி, நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கூறியதாவது:-

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபமானது தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த சிகிச்சை மையம் தயாராகிவிடும். ராசிபுரத்தில் அரசு கலை கல்லூரியிலும், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியிலும் இதேபோல் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்