பொதுமக்களுக்கு வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.துர்கா மூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் திரு.பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலையில் மளிகை மற்றும் காய்கறி வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
கூட்டத்தில், தளர்வுகள் இல்லா ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தடையில்லாமல் பாதுகாப்புடன் நேரடியாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வினியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, நடமாடும் விற்பனை வண்டிகள் மூலமாக காய்கறிகளை தினசரி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தினை கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பொதுமக்களுக்கு தடையின்றி மளிகை பொருட்கள் கிடைக்க நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாடுகள் செய்து வந்தது.
இதனை தொடர்ந்து, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
டோர் டெலிவரி செய்ய விருப்பம் உள்ள மளிகை கடை உரிமையாளர்கள், அதற்கான முறையான அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி அட்டை ஆகியவற்றை நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.
இது போலவே, மளிகை பொருள் மொத்த விற்பனையாளர்கள் ஆர்டர் பெற்ற பொருட்களை நகராட்சியின் அனுமதி பெற்ற சில்லரை வணிகர்களின் இடத்திற்கே சென்று தர வேண்டும். அதற்கான வாகன அனுமதியை நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதி பெற தேவையான ஆவணங்கள்: விண்ணப்ப கடிதம், கடைக்கான அரசு அனுமதி சான்று, டோர் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனத்தின் விபரம், ஓட்டுனர் விபரம், கடை ஊழியரின் அடையாள அட்டை.
டோர் டெலிவரி செய்வோர் இரட்டை முகக்கவசம் அணிந்தும், கையுறைகள் அணிந்தும், பொதுமக்களுடன் போதிய சமூக இடைவெளி கடைபிடித்தும் பொருட்களை பாதுகாப்புடன் டெலிவரி செய்ய வேண்டும்.
நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் வணிகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
காய்கறிகளை நகராட்சி நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்க வேண்டும். மளிகை பொருட்களை அதிகபட்ச சில்லரை விலைக்கும் (MRP) கூடுதலாக விற்பனை செய்ய கூடாது. விலை கூடுதலாக விற்பனை செய்பவர்கள், வணிகர் சங்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கான விற்பனை அனுமதியை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர் சங்கமே பரிந்துரை செய்யும் என பேரமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபட்டு பொதுமக்கள் அவதிப்படகூடாது என்கிற நல்லெண்ணத்தை மனதில் கொண்டு வணிகத்தை சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என வணிகர்களை நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது.
Comments
Post a Comment