ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்
கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
கொரோனா தொற்று தீவிரமாக பரவுவதால் முழு அடைப்பின்போதும் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
எனினும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு காலத்தில் வணிகத்திற்கு தடை என்பது அனைத்து தரப்பிற்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் செல்போன் மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்வதால் சில்லரை வணிகர்கள் தங்களின் வாடிக்கையாளர்களை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
ஏற்கெனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வணிகர்களுக்கு, ஒருதலைபட்சமான உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் பொருட்களை விநியோகிக்க மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளித்திருப்பதன் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.
எனவே, அத்தியாவசிய தேவையான உணவு பொருட்களை மட்டும் உணவகங்களில் இருந்து டெலிவரி செய்யும் ஆன்லைன் வணிகத்திற்கு அனுமதி அளிக்கவேண்டும். செல்போன், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்வதை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments
Post a Comment