இ-பதிவு முறை அமலுக்கு வந்தது நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை

இ-பதிவு முறை அமலுக்கு வந்ததைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

 இதனை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை கடைபிடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 இதனிடையே வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வெளி மாவட்டங்களுக்கு செல்லவும், மாவட்டத்திற்குள்ளும் பயணிக்க இ-பதிவு முறையை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இதன்படி திருமணம், நெருங்கிய உறவினர் இறப்பு, மருத்துவ தேவைகள், முதியார் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்கு செல்வதற்கு மட்டுமே மாவட்டம் உள்ளேயும், வெளியேயும் செல்லலாம் எனவும், இதற்கு இ-பதிவு கட்டாயம் எனவும் அரசு அறிவித்தது. இந்த உத்தரவு நேற்று காலை 6 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்திவேலூர் காவிரி இரட்டை பாலம், பள்ளிபாளையம் காவிரி பாலம் உள்பட மாவட்டத்தின் அனைத்து எல்லை பகுதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இ-பதிவு செய்யாமல் வந்த வாகனங்களை நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

பரமத்திவேலூர் இரட்டை காவிரி மேம்பாலத்தில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள், இ-பதிவு செய்துள்ளனரா என ஆய்வு செய்தனர். அப்போது காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள், அவசர தேவைக்காக இ-பதிவு செய்த வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

நாமக்கல்-ஈரோடு மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி, தேவையின்றி வந்தவர்களை திருப்பி அனுப்பினர். 

இதேபோல் வாகன ஓட்டிகள் இ-பதிவு செய்துள்ளார்களா
என ஆய்வு செய்து, என்ன காரணங்களுக்காக செல்கிறார்கள் என்பதையும் விசாரித்தனர். மேலும், பள்ளிபாளையம் பழைய காவிரி பாலத்தை மூடி சீல் வைத்தனர். சோதனையின் போது இ-பதிவு இல்லாமல் ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிபாளையத்திற்கு வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது