நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தடுப்புகள் அமைப்பு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாமக்கல் நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் உள்ளவா்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை இந்த பகுதிகளில் மட்டும் 7 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 210 படுக்கைகளும், இதர நோயாளிகளுக்காக 258 படுக்கைகளும் உள்ளன.
கொரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு கொரோனா வாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
பிரசவம், விபத்து, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகளைத் தவிா்த்து கண், காது, மூக்கு, மூட்டு உள்ளிட்ட சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அவையும் கொரோனா வாா்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நோய் பரவல் அதிகரிப்பால் மருத்துவா்களும், செவிலியா்களும் கலக்கத்தில் உள்ளன. ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் குணமடைந்துள்ளாா். மேலும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கவும், வெளியாள்கள் கொரோனா மையத்துக்குள் செல்வதை தடுப்பதற்காகவும் ஆங்காங்கே தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கூறியதாவது
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ச்சியாக உயா்ந்து வருகிறது. படுக்கை வசதிகளை அதிகரிக்கும் வகையில் பிரசவம், விபத்துக்கான வாா்டுகளைத் தவிா்த்து, இதர வாா்டுகள் அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கான வாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் காவல் துறை சாா்பில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்றுடையோா் அதிகம் சிகிச்சை பெறுவதால் மருத்துவமனையிலிருந்து தொற்றாளா்கள் யாரும் வெளியேறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை காரணமாக நகராட்சி, காவல் துறை இணைந்து தகரம் கொண்டு தடுப்புகளை அமைத்துள்ளனா் என்றனா்.
Comments
Post a Comment