தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 25 படுக்கைகள் உள்பட 50 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA., நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் K.R.N. ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நெருக்கடியை தவிர்க்க நகராட்சி மண்டபத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் லேசான பாதிப்புகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைவில் மாற்றப்பட உள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 590 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. தினசரி 4,500 லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இது தொய்வின்றி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ஓரிரு நாட்களில் சித்தா சிகிச்சை மையம் தொடங்க உள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே 16 சோதனை சாவடிகள் இருந்த நிலையில், அவற்றின் எண்ணிக்கை தற்போது 32 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு இ-பதிவு தேவையில்லை. அடையாள அட்டையை காண்பித்து விட்டு பணிகளுக்கு செல்லலாம்.

தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என கடிதம் எழுதி உள்ளேன். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வருவாய் அலுவலர், நலப்பணிகள் இணை இயக்குனர் ஆஸ்பத்திரிகளை ஆய்வு செய்து, ஆக்சிஜனை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா பரிசோதனை மையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அது மூடப்பட்டு விட்டது. எனவே தனியாரிடம் பரிசோதனைக்கு வழங்கி வருகிறோம். இதனால் பரிசோதனை முடிவு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், தாசில்தார் தமிழ்மணி, நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம், தி.மு.க. மாநில நிர்வாகிகள் மணிமாறன், கைலாசம், ராணி, நகர பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், பூபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது