ஊரடங்கின்போது தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்
சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கினை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, தேநீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 13 நிலையான சோதனைச் சாவடிகள் மற்றும் 42 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கி மீறி கடை திறந்தவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் என கடந்த நான்கு நாட்களில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஊரடங்கை மீறும் வகையில், அவசியமற்ற காரணங்களுக்காக வாகனங்களில் சுற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு நகரின் முக்கியப் பகுதி சாலைகளை நேற்று போலீஸார் தடுப்புகளைக் கொண்டு அடைத்தனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்து, அபராதம் விதித்தனர். இதனிடையே,
ஊரடங்கு சமயத்திலும் பெட்ரோல் பங்குகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் சோதனை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் முகக்கவசம் அணியாததால் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
நாமக்கல்லில் வாகனச் சோதனை
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கை மீறியவர்களைக் கண்காணித்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். திருச்செங்கோட்டில் நகர காவல்துறை ஆய்வாளர் பாஸ்கர் பாபு தலைமையில் நடந்த வாகனச் சோதனையில் உரிய காரணமின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்பணிகளை கூடுதல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரவி ஆய்வு செய்தார்.
சேலம் மாநகர பகுதியில் 16 இடங்களில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம் அருகே பகல் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை போலீஸார் பிடித்து, வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து, ஊரடங்கு விதிகளை மதிப்போம் ‘தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே சுற்ற மாட்டோம்’ என்று உறுதி மொழி ஏற்க வைத்து, அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment