பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாது போனால் வணிகம் தொடர இயலாது
நாமக்கல் மாவட்ட
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை
கடந்த சனிக்கிழமை முதல் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என தமிழக அரசு கட்டுபாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவுதல் தீவிரமாக உள்ள இந்த சூழ்நிலையிலும் அரசின் இந்த தளர்வு பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் புரிந்துகொண்டு மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். கடைகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி, வணிகர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தினமும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வராமல் முடிந்தவரை 1 வாரம் அல்லது 10 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். அப்படி வாங்க இயலாதவர்கள், பொருட்களை வாங்க ஒருவரை மட்டுமே கடைகளுக்கு அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் குழந்தைகளை உடன் அழைத்து செல்லாதீர்கள்.
வணிகம் செய்ய குறைந்த நேரமே வழங்கப்பட்டிருப்பதால், அதனை புரிந்துகொண்டு வணிகர்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள். கூட்டம் சேர்க்காமல் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். பொதுமக்கள் செய்யும் தவறுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால், கடைகளை திறக்கவே வணிகர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கூடிய மிகப்பெரும் பொறுப்பை வியாபாரிகளுக்கு அரசு கொடுத்துள்ளது. அதை நாங்கள் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளும் பொதுமக்களும் எங்களோடு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வணிக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது, அடையாள அட்டையை காண்பித்தாலும் பல இடங்களில் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அச்ச உணர்வினால் பணியாளர்கள் தட்டுப்பாடு உண்டாகிறது.
மேலும், மளிகை கடைகளில் அடுத்த நாள் விற்பனைக்கு தேவையான பொருட்களை பேக்கிங் செய்ய போதிய நேரம் இல்லாததால் வணிகத்தை தொடர முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே விற்பனை நேரம் போக, கடைகளுக்கு உள்ளே பேக்கிங் செய்த கூடுதலாக 3 மணி நேரம் வழங்கினால் மட்டுமே இப்பிரச்சனையை சமாளிக்க இயலும்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வணிகர்களும் சேவை உணர்வோடு தான் வணிகத்தை செய்து வருகிறார்கள். அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களும், நடைமுறை சிக்கல்களை புரிந்துகொண்டு அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே எங்களால் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க இயலும்!
Comments
Post a Comment