கோடை உழவால் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்; பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவிப்பு
கோடை உழவு செய்வதன் மூலம் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே இது கோடை உழவு செய்ய ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்வது மிகவும் அவசியமானது. வயல்களில் இரும்பு கலப்பை அல்லது டிராக்டர் மூலம் குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
இதனால் களைகளான செடிகள், புல், பூண்டுகளின் வேர்கள் அறுபட்டு, காய்ந்து அகற்றப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் புதைந்திருக்கும் புழுக்கள் நிலத்தின் மேற்பரப்பிற்கு வருகின்றன. அப்போது பறவைகள் அவற்றை பிடித்து உண்பதால் கூட்டுப்புழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. மேலும் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் மண்ணில் நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மழைநீர் பூமிக்குள் இலகுவாக சென்று மண்ணின் ஈரப்பதத்தை காக்கிறது. மேலும், நாற்றங்கால் மற்றும் நடவு வயல் உற்பத்தி எளிதாகிறது.
பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு இடப்படும் உரம் அனைத்து பயிர்களுக்கும் சமச்சீராக கிடைக்கிறது. இதனால் பயிர் செழித்து வளர்ந்து, நல்ல மகசூலை தருகிறது. எனவே விவசாயிகள் இந்த பருவத்தில் தவறாது கோடை உழவு செய்து பயன்பெற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment