நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்களின் வேலை நேரத்தை குறைப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம்
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு - இன்று (21/06/2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வணக்கம்.
கொரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை உணர்ந்தும், மக்கள் நலன் கருதியும், நமது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சங்கங்களை சேர்ந்த வணிகர்களிடம் தங்கள் நிறுவனத்தின் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதன்படி அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்து, கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக இன்று 21/06/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டன.
1. வணிக நிறுவனங்கள் செயல்படும் வேலை நேரத்தை குறைத்துக் கொள்வதன் மூலம், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பணி எளிதாகும் என மாவட்ட நிர்வாகம் கருதினால், அதற்கு முழு ஒத்துழைப்பையும் தர நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது.
வேலை நேரம் குறைப்பு பற்றிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் உத்தரவாக பிறப்பித்தால் மட்டுமே இதனை முழுமையாக செயல்படுத்த இயலும். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வணிக நிறுவனங்களின் வேலை நேரத்தை குறைத்து, அதற்கான உத்தரவை வெளியிட்டால், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அதனை வரவேற்கும்.
இந்த வேலை நேர குறைப்பை கீழ்கண்ட வகையில், அனைத்து வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முடிவெடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைக்கு அனுப்புகிறோம்.
காய்கறி/மளிகை/வேளாண் பொருட்கள் விற்பனை:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
இதர வணிக நிறுவனங்கள்:
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
மேலும் கொரோனா பரவும் தீவிரம் குறையும் வரை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 100% முழு ஊரடங்கை அமல்படுத்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஆதரவு அளிக்கிறது.
2. வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வணிகத்தை செய்ய வேண்டும்!
3. முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யவும் கூடாது.
4. கடை நுழைவாயிலில் அவசியம் கிருமி நாசினி, தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
5. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
6. எக்காரணம் கொண்டும் குளிர்சாதன (A/C) வசதியை வணிக நிறுவனத்தில் பயன்படுத்த கூடாது.
அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்து, நமது வணிகத்தை மிகப் பாதுகாப்புடன் தொடருவோம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment